ஏன் சன்னும் மூன்னும் சேர்ந்து வரமாட்டேங்கிது – சந்தியா

பஞ்சுமிட்டாய் சார்பாக கி.ரா குழம்பு நாடகம் நடத்த ஏற்பாடு செய்தோம். இந்த நிகழ்வை பற்றி பலரிடம் எப்படிக் கொண்டு சேர்ப்பது? எத்தனை பேர் வருவார்கள்? நிதியுதவிக்கு என்ன செய்வது? என பல கேள்விகளுக்கு பிறகு செய்துப் பார்க்கலாம் என்று இறங்கிவிட்டோம். இன்ப அதிர்ச்சி என்னவென்றால் எதிர்பார்த்ததை விட வெகு மக்களிடம் இந்த நிகழ்வு சென்று சேர்ந்து, அரங்கம் நிறைந்தது .
DSC_0430

நாடகம் தொடங்குவதற்கு முன்னர் உற்சாகம் அளிக்கும் வண்ணம் ஒரு சிறுமியின் பறை இசையை கேட்க நேர்ந்தது. பறை இப்போதெல்லாம் மிக அரிதாகிவிட்டது என்றே சொல்லலாம், அந்தச் சிறுமியின் தாயும் அதே உற்சாகத்துடன் வாசித்தது கூடுதல் சிறப்பு. இப்போது குழந்தைகளுக்கு  படிப்புக்கு அப்பாற்பட்டு ஏதேனும் சொல்லிக்கொடுக்க நாம் தேர்ந்தெடுக்கும் பல கலைகள், அதனால் பிற்காலத்தில் பணமும் புகழும் ஈட்ட முடியுமா என்ற கேள்விகளுக்கு பின்னரே முடிவு எடுக்கப் படுகிறது. அதுமட்டுமின்றி அழியும் கலைகளான பறையாட்டம் ,ஒயிலாட்டம் , கரகாட்டம் போன்றவற்றையும் நம் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கலாம்.

எனக்கு நாடகம் நேரடியாக பார்த்த அனுபவம் இல்லை, இதுவே முதல் முறை அதனால் எந்த பெரிய எதிர்பார்ப்பையும் இன்றி சென்று அமர்ந்தேன்.  ‘பாம் பொம் பாம் பாம் பொம் பாம்’ என்ற பாடி ஆடிக் கொண்டே வந்தனர் நாடக குழு. கி. ராஜநாராயணன் பற்றி சிறிய அறிமுகத்திற்கு பின்னர் அவர்களை பற்றியும் சிறிது கூறிவிட்டு கதைக்குள் சென்றோம் (குழந்தைகளுடன் எங்களையும் அந்த உலகத்துக்கு அழைத்து சென்றனர்).

DSC_0467

அது பூமிக்கும் வானத்துக்கும் ஆன காதல் கதை, “அட நமக்கு பிடிச்ச ஏரியா ஆச்சே” என்று ஆர்வமானேன். பல ஆண்டுகளுக்கு முன்பு, வானம் பூமியில் இருந்து மூன்று அடி தூரத்தில் இருந்தது.  ஒட்டகங்கள் தவழ்ந்தன . பறவைகள் தரவை என அழைக்கப்பட்டன, அவை தரையில் நகர்ந்தன. சூரியனும் சந்திரனும் வானம் பூமியின் குழந்தைகள். இருவரும் மிகவும் குறும்புக்காரர்களாக இருந்தனர். மனிதர்கள் யாரும் அவர்களை தடுத்து நிறுத்த முடியவில்லை, ஒரு இட்லி விற்ற பாட்டி தவிர. சூரியன் சந்திரனை பாட்டி அடித்து மேலே விரட்ட அம்மா வானமும் அவர்களைத் தேடிச்சென்றது. பூமியில் உள்ள அனைத்து பருத்தி பந்துகளும் வானத்தில் பறந்து மேகங்களை உருவாக்குகின்றன. அப்படி தான் முதலில் மேகம் உருவானது என்று தொடங்கி பருந்து ஏன் உயர பறக்கிறது? கோழி எதை கீழே  தேடிக்கொண்டே இருக்கிறது? மொச்சைக்கொட்டையில் ஏன்  நடுவில் வெள்ளை கோடு உள்ளது? பாம்பு ஏன் சட்டை உரிக்கிறது? என குழந்தைகளுக்கு அடிக்கடி தோன்றும் பல கேள்விகளுக்கு கற்பனையில் ஒரு கதையாக சென்றது ஒரு மணிநேரம்.  அதுமட்டும் இன்றி அரசியலில் சூடான தலைப்புகளான ஆதார் கார்டு, மாட்டு இறைச்சி பற்றியும் ஆங்காங்கே நகைச்சுவை வெடித்தது .

இதுபோன்ற பல கேள்விகளை குழந்தைகள் கேட்கும் பொழுது நம் அதற்கான உண்மையான காரணத்தை கூறவே விழைகிறோம். ஆதிரனும் ஒரு முறை ‘ஏன் சன்னும் மூன்னும் சேர்ந்து வரமாட்டேங்கிது’ என கேட்டான், நான் முதலில் அவனிடம் பூமி சூரியனை சுற்றுகிறது என தொடங்கி ரொட்டேஷன் ரெவொலுஷன் என கிளாஸ் எடுக்க தொடங்கிவிட்டேன் அவனுக்கு விடை திருப்தி அளிப்பதாய் இல்லை,

இந்த நாடகம் பார்த்த பின்னர் அனைத்து கேள்விகளுக்கும் உண்மை காரணங்களை கூறுவதை விட, கற்பனை கதைகளை கூறுவது இன்னும் அவர்களை நிறைய சிந்திக்க வைக்கும் என்றே தோன்றியது . நாம் எப்போதும் குழந்தைகளை நம் உலகிற்கு விரைவில் அழைத்துச்செல்ல முயற்சிக்கிறோம். நம் அவர் உலகத்திற்கு செல்வது கடினமாக இருந்தாலும் அதுவே அழகு. இந்த நாடகம் குழந்தைகளுக்கு என்பதை விட பெரியவர்களிடத்தில் உள்ள குழந்தைகளை வெளியில் கொண்டு வர ஒரு தளமாகவும் அமைந்தது. மேலும் இதுபோன்ற பல நிகழ்வுகளை நடத்தவும் பெரிய உந்துகோலாக இருந்தது.

DSC_0555

-சந்தியா

பஞ்சுமிட்டாய் சிறார் குழு

Advertisements

பஞ்சுமிட்டாய் அச்சு இதழ் வாசித்தேன் – விஜயபாஸ்கர் விஜய்

பஞ்சுமிட்டாய்-5 பற்றிய எழுத்தாளர் விஜயபாஸ்கர் விஜய் அவர்களின் பார்வை…

 

பஞ்சுமிட்டாய் அச்சு இதழ் வாசித்தேன்.

குழந்தைகள் மீது உண்மையான அக்கறையோடு தயாரிக்கப்பட்ட இதழகாக தோன்றியது. இதன் அர்த்தம் மற்ற சிறார் எழுத்துக்கள் எல்லாம் அக்கறையில்லாமல் இருக்கிறது என்பதில்லை.

பஞ்சுமிட்டாய் இதழ் நடத்துபவர்களுக்கு ஒரு தெளிவான நோக்கம் இருக்கிறது. அது குழந்தைகளை வாசிக்க வைப்பது. ஒரு வாரம் முன்பு ஆன்னா ஆவன்னா படிக்க தொடங்கிய குழந்தைக்களுக்கும் வாசிக்க அதில் கதைகள் இருக்கிறது. இதில் நான் ரசித்தது நிரஞ்சன் என்ற இந்த ஐந்து வயது பையன் எழுதிய இந்தக் கதைதான்.

// நான் அப்படியே வந்துட்டு இருந்தேன். அங்க ஒரு மரம் இருந்துச்சு. அதுல இருந்து ஒரு இலையை பறிச்சிட்டு வீட்டுக்கு வந்துட்டேன் // அவ்வளவுதான் கதை. நமக்கு இது சாதரண கதை. ஆனால் ஒரு ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு முக்கியமான கதை.

இக்கதையில் உள்ள வார்த்தைகளில் இருக்கும் எழுத்துக்கள் எண்ணிக்கையைப் பாருங்கள்.

நான் – 2 . அப்படியே – 5 . வந்துட்டு – 5 , இருந்தேன் – 5 ,
அங்க – 3 ஒரு – 2 மரம்- 3 இருந்துச்சு – 4
அதுல – 3 , இருந்து – 4 , ஒரு – 2 , இலையை – 3 , பறிச்சிட்டு – 6 , வீட்டுக்கு – 5 , வந்துட்டேன் – 6
ஆக ஐந்து வயது குழந்தை 2 + 5 + 5 + 3 + 2 + 3 + 4+ 3 + 4 + 2 + 3 + 6 + 5 + 6 = 53 எழுத்துக்கள் ( தோராயமாக)

15 வார்த்தைகள், 53 எழுத்துக்கள் என்பதை ஒன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தையினால் யார் உதவியும் இல்லாமல் ”தனியான உலகத்தில்” படித்து புரிந்து கொள்ள முடியும்.

இந்த ”தனியான உலகத்தில்” என்பது முக்கியமானது. எந்த செயலையும் தனியாக செய்து பார்க்கும் போது கிடைக்கும் தன்னம்பிக்கை அலாதியானது.

வாசிப்புக்கும் அது பொருந்தும். பெற்றோர்கள் உதவி இல்லாமல் எந்த குழந்தை தனியே வாசிக்க ஆரம்பிக்கிறதோ அதுவே புத்தகம் வாசிப்புக்கு உள்ளே போகும். பெற்றோர்கள் வழிகாட்டுதலை சொல்லவில்லை.

பெற்றோர்கள் தொடர்ச்சியாக அருகில் இல்லாமல் தனியே ஒரு மதிய உணவுக்கு பிறகு கிடைக்கும் தனிமையில் ஒரு குழந்தை அதுவாக ஒரு புத்தகத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்தால் அதுதான் அதன் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாகும்.

சுந்தரராமசாமி கூட ஒரு கட்டுரையில் (?) சொல்கிறார் “நான் என் மகனுக்கு ( காலச்சுவடு கண்ணன்) இதைப் படி படிக்காதே என்று சொல்வதில்லை. அவன் படிக்க விரும்பும் புத்தகத்தை ஆங்காங்கே அவன் கண்ணில் படுவது மாதிரி வைத்துப் பார்ப்பேன். அதுவாக அவனை ஈர்த்தால் ஈர்த்தது அவ்வளவுதான்” என்றிருப்பார்.

முன்வருதல் என்பதற்கான மனநிலையை இந்த பஞ்சுமிட்டாய் இதழ் வளர்க்கிறது.

ஐந்து வயது முதல் வாசகரை உருவாக்குவது என்பது பெரிய விஷயமாகும்.

இதில்லாமல் இதில் உள்ள ஒவியங்களில் பெரும்பாலனவை குழந்தைகள் வரைந்தவைதான். முதல் வாசகி என்ற அதே கான்சப்ட் முதல் ஒவியருக்கும் பொருந்துகிறது.

இதில் வரும் ஒவியங்களை பெரியவர்கள் ஒருவேளை வேகமாக கடந்து விடலாம். ஆனால் வாழ்க்கையில் ஆரம்பித்தில் இருக்கும் குழந்தைகளுக்கு அது கொடுக்கும் உணர்வு புத்துணர்வானது.

பஞ்சுமிட்டாய் இதழை வாங்கி உங்கள் 12 வயதுகுட்பட்ட குழந்தைகளுக்கு கொடுத்து விட்டு தனியே விட்டு சென்று விடுங்கள்.

அவர்கள் அங்கே ஒரு வாசகராய், எழுத்தாளராய், ஒரு ஒவியராய் உருவாகி இருப்பார்கள்.

கதைப் பெட்டி

வணக்கம். உங்கள் வீட்டு சுட்டிகளின் கதைகளை சேகரிக்க வந்துள்ளது எங்கள் “கதைப் பெட்டி”. குழந்தைகள் தங்கள் விருப்பம்போல் கதை எழுதி இந்தப் பெட்டியில் போட்டுவிடலாம். குட்டிக் கதையோ நீண்ட கதையோ குருவி கதையோ பஸ்ஸூ கதையோ எந்த விதிமுறையும் இல்லாமல் தங்கள் மனம்போன திசையில் எழுதி குழந்தைகள் கதைப்பெட்டியில் போடலாம்.
ஆசிரியர்களும் பெற்றோர்களும் குழந்தைகளுக்கான இந்த முயற்சியை நிறைய குழந்தைகளிடம் சேர்க்க உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் . சேகரிக்கப்படும் கதைகள் சிறார் இதழ்களிலும் புத்தகங்களிலும் ஓவியத்தோடு சேர்ந்து உங்களைத் தேடி மீண்டும் வந்து சேரும்.
இடம் : இயல் வாகை அரங்கம் – 585 சென்னைப் புத்தகக் கண்காட்சி
நாள் : சனவரி 20,21,22
தொடர்புக்கு:
பிரபு – 9731736363
வெங்கட் – 9843472092
StoryBoxPoster2

பஞ்சுமிட்டாய்-5 வெளியீட்டு விழா

சென்னை வாசகர்களுக்கு டிசம்பர் மாத இறுதி என்றாலே கொண்டாட்டம் தான். சனவரியில் நடக்கும் சென்னை புத்தக கண்காட்சிக்காக தொடர் புத்தக வெளியீட்டு நிகழ்வுகள் டிசம்பர் முதலே நடந்துக் கொண்டே இருப்பது வழக்கம். அப்படித் தான் டிசம்பர் 30ம் தேதி அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஒரு வெளியீட்டு விழா நடந்தது. அந்த அரங்கில் கைத்தட்டல்களை விட சிரிப்பொலிகளே அதிகம் நிறைந்திருந்தது. அதுமட்டுமல்ல அந்த விழாவிற்கு வந்திருந்த வாசகர்களின் வயது 3 முதல் 12 வயது வரை தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சுமிட்டாய் சிறார் காலாண்டு இதழின் வெளியீட்டு விழா தான் அந்த அரங்கில் நடந்தது. நாற்பது சிறார்கள் கூடி நிகழ்வை அலங்கரித்தனர். சிறார்களுடன் பெரியோர்களும் சேர்ந்து ஆடிப் பாடி,விளையாடி தங்களது பொழுதை இனிதாக்கிக் கொண்டனர். அரையாண்டு விடுமுறை நேரம் என்றாலும் அரங்கம் சிறார்கள்,பெற்றோர்கள் என சுமார் 100 நபர்களால் நிறைந்திருந்தது.

PanchumittaiEvent_Potos_1

பெங்களூரை சேர்ந்த பஞ்சுமிட்டாய் சிறார் குழு இரண்டு வருடத்திற்கு முன்பு தங்களது அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள‌ தமிழ் சிறார்களுக்கு கதைகள் சொல்ல துவங்கியது. கதைகள் என்றதும் வழக்கமான நீதி போதனை கதைகளை தேர்வு செய்யாமல் சிறார்களை மகிழ்விக்கும் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். கதையுடன் பாடல்கள், பாரம்பரிய விளையாட்டுகள்,ஓவியங்கள் என தங்களது தேவைக்கேற்ப நிகழ்வை வடிவமைத்தனர். வாரந்தோறும் பெரியோர்களும் சிறார்களும் குடும்பமாக ஒன்றுக் கூடி கதைகள் பேசி விளையாடி வருகின்றனர். இதுவரை சுமார் 50 நிகழ்வுகள் நடத்தியிருக்கின்றனர். பெரியோர்கள் கதைகள் சொல்லி அதனை மகிழ்ந்த சிறுவர்கள் திடீரென தங்களது கற்பனைகளுக்கு வடிவம் தந்து கதைகள் சொல்லத் துவங்கினர். அதுவே பஞ்சுமிட்டாய் இதழாக உருமாறியது. முதல் நான்கு இதழ்கள் இணைய இதழாக வெளியானது. இதழுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பஞ்சுமிட்டாய் ஐந்தாம் இதழ் அச்சு இதழாக வெளியாகி தனது சிறகை விரித்து பறக்கத் துவங்கியுள்ளது. பெங்களூரூ,கோவை,கோத்தகிரி என‌ அதன் பயணத்தின் ஒரு பகுதி தான் சென்னையில் நடந்த வெளியீட்டு விழா.

நிகழ்வு மதியம் 3 மணிக்கு இனிப்பான அறிமுகத்துடன் துவங்கியது. துவக்கம் முதலே சிறார்கள் தங்களுக்கான நிகழ்வென உணர்ந்திருந்தார்கள். சிறார்களுக்கான பாடல்கள்,கதைகள்,விளையாட்டுக‌ள் என சிறார்களை முதன்மைப்படுத்தியே நிகழ்வு வடிவமைக்கப்பட்டிருந்தது.

சிறார் பாடல்கள் என்றதும் பாடப் புத்தகத்திலுள்ள‌ rhymes போல ஒப்புவிக்கும் பாடலென நினைத்துவிட வேண்டாம். கொம்பு முளைச்ச யானை என்ற பாடல்  துதிக்கைப் போன்று கைகளை உயர்த்தி துவங்கியது, சிறார்கள் பெற்றோர்களாகவும் பெற்றோர்கள் சிறார்களாகவும் மாற வைத்தது எந்திருக்க நேரம் ஆச்சு & தூங்குற நேரம் ஆச்சு பாடல், மாமரம் ஏறலாம் என்ற‌ பாடல் வாழைமரம் என்றதும் வழுக்கி வழுக்கி மொத்த கூட்டத்தையும் கீழே விழச்செய்தது. ஒவ்வொரு பாடலுமே ஆட்டத்துடன் கலைக்கட்டியது. பாடல்களில் ஆட்டம் போல் கதைகளிலும் சிங்கம் போல் சிரித்தும் குருவிப் போல பேசியும் சிறார்களை மகிழச் செய்யும் அனைத்து விசயங்களும் நிகழ்வில் நிறைந்திருந்தது.

PanchumittaiEvent_Potos_2

சிறார் உலகில் கதை,பாடல்கள் போல விளையாட்டுக்களுக்கு எப்பொழுதும் ஒரு முக்கிய இடமுண்டு. அப்படித் தான் இந்த நிகழ்விலும் விளையாட்டுகள் நிறைந்திருந்தது. விளையாட்டுக‌ள் என்றதும்  பெரியோர்களும் ஆர்வத்துடன் கலந்துக்கொண்டு தங்களது வயதை குறைத்துக்கொண்டனர்.

நமது பாரம்பரிய விளையாட்டுகளின் சிறப்பு அம்சங்களின் ஒன்று விளையாட்டுகளுடன் இணைந்திருக்கும் பாடல்கள்.  அந்தப் பாடலிலுள்ள‌ வார்த்தைகள் தனித்துவமானது. மொழியை இதுப் போன்ற விளையாட்டுக்கள் மூலம் தான் எளிமையாக அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லமுடியும் என்ற நம்பிகையில் தான் பஞ்சுமிட்டாய் குழு இயங்குகிறது. அதன்படியே   டிக் டிக் யாரது,காட்டுக்குள்ள மரம் இருக்கு,குடு குடு ராசா,அட்டலங்கா புட்டலங்கா   போன்ற விளையாட்டுக்களை நிகழ்வில் விளையாடி மகிழ்ந்தோம். விளையாடும் போது சிந்தும் புன்னகைகளுக்கு தனி அழகு இருக்கத்தான் செய்கிறது என்று மீண்டும் உணர்ந்த தருணம் அது.

இதனைத் தொடர்ந்து பஞ்சுமிட்டாய் சிறார் காலாண்டு இதழ் வெளியானது. சிறப்பு விருந்தினராக‌ எழுத்தாளர் சுகுமாரன்,எழுத்தாளர் தஞ்சாவூர் கவிராயர்,  பாரம்பரிய விளையாட்டுகள் குறித்து ஆராய்ந்து அதனை சிறார்களிடம் கொண்டு சேர்க்கும் இனியன் (பல்லாங்குழி அமைப்பு) , ஓவியர் டி.என்.ராஜன் அவர்கள் கலந்துக்கொண்டனர்.

சுகுமாரன் அவர்கள் பஞ்சுமிட்டாய் இதழ் பற்றியும் சிறார் இலக்கியத்தில் நூலகத்திற்கு உள்ள பங்கினைப் பற்றியும் பேசினார். இதழிலுள்ள சிறார்கள் சொன்ன கதையின் அமைப்பு மற்றும் சிறார்களின் கற்பனை குறித்தும், சிறார்களின் கற்பனைகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டிய அவசியத்தைப் பற்றியும் விரிவாக பேசினார். தனது அமெரிக்க பயணத்தில் கவனித்த விசயங்களைப் பற்றியும் பகிர்ந்துக்கொண்டார். அதனுடன் சிறார்களுக்கு அழகிய கதை ஒன்றையும் சொல்லி மகிழ்வித்தார்.

PanchumittaiEvent_Organisers

அடுத்து “மொட்டை மாமா” என்று அழைக்கப்படும் இனியன் அவர்கள் சிறார் மற்றும் பெரியோர்களுக்கு சப்தசிரிப்பு என்ற‌ விளையாட்டை அறிமுகம் செய்து அரங்கை அழகுப்படுத்தினார். உயிர் எழுத்துக்களைக் கொண்டு உருவான விளையாட்டு இது. குறில்,நெடில் வேறுபாடுகளை அழகாக விளக்கும் விளையாட்டு. சிறுவர்களுடன் பெரியோர்களும் விளையாடி மகிழ்ந்தனர். குறிப்பாக இறுதியில் “ஒள” என்ற எழுத்தின் ஓசையை எப்படி விளையாட‌ வேண்டுமென்று  சிறுவன் ஒருவன் தனது அம்மாவிற்கு சொல்லிக்கொடுத்தது அனைவரையும் மகிழச்செய்தது.

அடுத்து தஞ்சாவூர் கவிராயர் அவர்கள் சிறார்களுக்கு தனது பேரனுடனான உரையாடலை சொல்லி அதனுடன் நிழல் சிங்கத்தின் கதையை சொல்லி குழந்தைகளை தன்வசப்படுத்தினார்.

அதனைத் தொடர்ந்து நிகழ்விற்கு வந்திருந்த சில சுட்டிகள் பஞ்சுமிட்டாய் இதழிலுள்ள பாடல்களை  பாடி கூட்டத்தை  அசத்தினர். சென்னை நண்பர் ஒருவர் ஏற்பாடு செய்திருந்த இனிப்புடன் நிகழ்வு முடிந்தது.

நிகழ்வை அறிவித்ததும் சில பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள்  துறுதுறுப்பானவர்கள் அவர்களை அழைத்து வரலாமா என்று கேட்டிருந்தனர். அதே பெற்றோர்கள் நிகழ்வு முடிந்து திரும்புகையில் தங்களது பிள்ளைகள் நிகழ்வில் முழுதும் இணைந்திருந்ததை நினைத்து நினைத்து மகிழ்ந்தனர். மேலும் சிலப் பெற்றோர்கள் தங்களது பகுதியிலும் இதேப் போன்ற நிகழ்வை நடத்த வேண்டுமென்ற ஆர்வத்தையும் பகிர்ந்துக்கொண்டனர்.

PanchumittaiEvent_Guests

சென்னை நிகழ்வின் தடபுடலான வரவேற்பைத் தொடர்ந்து பஞ்சுமிட்டாய் மேலும் தனது பயண டைரியை புதுப்பித்துக்கொண்டது என்றே சொல்ல வேண்டும். நிகழ்வுகள்,இதழியல் என பஞ்சுமிட்டாயுடன் துணை நிற்கும் நண்பர்களுக்கும் இந்த நிகழ்வை சாத்தியப்படுத்திய அனைவருக்கும் பஞ்சுமிட்டாய் குழு சார்பில் நன்றிகளை சொல்லிக்கொள்கிறோம்.

குறிப்புகள்:

இடம் : சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம் – புத்தக வெளியீட்டு அரங்கம்

நாள் : 30/12/2017 மதியம் 3 மணி முதல் 5.30 மணி வரை

கலந்துக்கொண்ட சிறார்கள் : 40

மொத்தமாக கலந்துக்கொண்ட நபர்கள் : 100 (கிட்டத்தட்ட)

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : பிரபு,ஜெயக்குமார்,சர்மிளா (பஞ்சுமிட்டாய் சிறார் குழு – பெங்களூரு)

நிகழ்வில் கலந்துக்கொண்ட விருந்தினர்கள் : எழுத்தாளர் சுகுமாரன்,எழுத்தாளர் தஞ்சாவூர் கவிராயர்,  பாரம்பரிய விளையாட்டுகள் குறித்து ஆராயும் இனியன் (பல்லாங்குழி அமைப்பு) , ஓவியர் டி.என்.ராஜன்

பஞ்சுமிட்டாய் ஆசிரியர் குழு : பிரபு,ஜெயக்குமார்,சர்மிளா,திவ்யா,ராஜேஸ்,அருண்கார்த்திக்

பஞ்சுமிட்டாய் சிறார் நிகழ்வின் தொகுப்பு :

 1. சிறாருடன் அறிமுகம்
 2. மாமரம் ஏறலாம் – பாடல்
 3. டிக் டிக் யாரது – விளையாட்டு
 4. டொக்கு – கதை சொல்லல்
 5. கொம்பு முளைச்ச யானை – பாடல்
 6. காட்டுக்குள்ள மரம் இருக்கு – விளையாட்டு
 7. அட்டலங்கா புட்டலங்கா – விளையாட்டு) \
 8. சிங்கமும் குருவியும் – கதை சொல்லல்
 9. குடு குடு ராசா – விளையாட்டு
 10. இதழ் வெளியீடு – சுகுமாரன்,இனியன்,தஞ்சாவூர் கவிராயர்,ராஜன்
 11. இதழ் அறிமுகம் & கதை சொல்லல் – சுகுமாரன்
 12. சப்தசிரிப்பு விளையாட்டு – இனியன் (உயிரெழுத்துக்களை வைத்து விளையாடிய ஆட்டம்)
 13. எந்திருக்க நேரம் ஆச்சு, தூங்குற நேரம் ஆச்சு-பாடல்
 14. கதை சொல்லல் – தஞ்சாவூர் கவிராயர்
 15. பஞ்சுமிட்டாய்-5 ம் இதழின் பாடலகள் – சிறார்கள் ரமணி,இசை,இஷானி பாடினார்கள்

 

 

பஞ்சுமிட்டாய் கிடைக்கும் இடங்கள்

பஞ்சுமிட்டாய் சிறார் காலாண்டிதழ் கிடைக்கும் இடங்கள்
சென்னை புத்தகக் கண்காட்சியில் :
யாவரும் –  176
இயல்வாகை – 585
கருத்துப் பட்டறை – 244
டிஸ்கவரி புக் பேலஸ் – 275, 276, 317, 318
Phone / Whatsapp : பிரபு – 9731736363
மின்னஞ்சல்editor.panchumittai@gmail.com
Panchumittai_FB_cover

பஞ்சு மிட்டாய்-5

p1

“பஞ்சு மிட்டாய்-5” இதோ அச்சு இதழாக உங்கள் இல்லம் தேடி வர தயாராக இருக்கிறது. குழந்தைகள் சொன்ன கதைகளும்,கிறுக்கிய அழகிய ஓவியங்களும்,தமிழ் வார்த்தை விளையாட்டுகளும் மற்றும் பெரியவர்கள் எழுதிய குழந்தைப் பாடல்களும் சேர்ந்து குழந்தைகளின் கற்பனைகளுக்கு அழகிய வடிவம் கொடுத்தப் புத்தகம் தற்பொழுது உங்களின் அழைப்பிற்காக காத்திருக்கிறது. வண்ண‌மையமான் பஞ்சு மிட்டாய் உங்கள் சுட்டிகளுடன் கதை பேசி,பாட்டுப் பாடி,ஆட்டம் போட…

தொலைபேசி :
பிரபு- 9731736363 ,
மின்னஞ்சல்: editor.panchumittai@gmail.com

தனி இதழ் : ரூ.50/-

சந்தா விபரம் :
5 இதழ்கள் – ரூ.250/- , 10 இதழ்கள் – ரூ.500/-

சென்னையில் கிடைக்குமிடம்: வானம் பதிப்பகம், 9176549991

நன்றி,
பஞ்சு மிட்டாய் சிறார் குழு

பஞ்சுமிட்டாய் இதழ் – சந்தா முன்பதிவு

இதுவரை மின்னிதழாக உலா வந்துக்கொண்டிருந்த பஞ்சுமிட்டாய் சிறுவர் காலாண்டு இதழ் அடுத்த இதழிருந்து அச்சு வடிவத்திற்கு மாறுகிறது. பஞ்சுமிட்டாய் காலாண்டிதழ் உங்கள் இல்லம் தேடி வர விருப்பமாயின் இங்கே உங்களை தொடர்பு கொள்ளும் தகவல்களை இட்டுச் செல்லுங்கள். இதழ் வரும்போது தகவல் பரிமாற்றம் செய்து கொள்ள ஏதுவாக இருக்கும்.

 

தகவலுக்காக‌ :

முந்தைய இதழ்கள் –

இதழ் 4 – https://goo.gl/5j4XQS

இதழ் 3 – https://goo.gl/cTWuXk

இதழ் 2 – https://goo.gl/Liaiyc

இதழ் 1 – https://goo.gl/Ycv8ne

பஞ்சுமிட்டாய் பற்றி பொதிகை தொலைக்காட்சியில் வெளியான நேர்காணல் :
வீடியோ இணைப்பு : https://youtu.be/bAxX_Z60sKA

தொடர்புக்கு :

பிரபு – 9731736363
ராஜேஸ் – 9740507242
ஜெயக்குமார் – 9008111762
அருண் கார்த்திக் – 9902769373

நன்றி,
பஞ்சுமிட்டாய் ஆசிரியர் குழு,