பல வண்ணங்களில் பஞ்சுமிட்டாய்

பெங்களூர் போன்ற நகரங்களில்,வார இறுதியில் வீட்டை விட்டு வெளியே கிளம்புவது என்பது ஒரு திகிலான விசயம். அருகிலுள்ள இடமாக இருந்தாலும் கூட போக்குவரத்து நெரிசலை நினைத்தாலே,அலுவலகத்திலுருந்து திரும்பும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று தான் தோன்றும். அப்படி இருக்கும் சூழலில் தங்களது பிள்ளைகளுக்காக வெவ்வேறு இடங்களிலிருந்து பஞ்சுமிட்டாய் வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் எங்கள் குழுவின் சார்பாக நன்றிகளை சொல்லிக்கொள்கிறோம். 40 சிறுவர்கள் சூழ மொத்தமாக 100 பேர்கள் மத்தியில் வெளியீட்டு விழா எளிமையாக நடந்தது. வாசல் கோலமும் (தோழி சுதா அவர்களுக்கு நன்றிகள்) ,சுவர்களில் ஒட்டியிருந்த‌ இதழ்களின் பக்கங்களும் (தோழர் ப்ரவின் அவர்களுக்கு நன்றிகள்) அனைவரையும் இனிதே வரவேற்றது.

Dance

சிறுவர் உலகில் பாடலுக்கு தனி இடம் உண்டு. பாடல் மூலமாக அவர்களை எளிமையாக கவர்ந்திட‌லாம். மொழியும் பாடல் மூலமாக அவர்களை சுலபமாக சென்றடையும். ஆனால் பாடல் என்றாலே சினிமா பாடல்கள் தாண்டி எதையும் அவர்களுக்கு நாம் அறிமுகம் செய்வதில்லை. சினிமா பாடல்களிலுள்ள இசையும்,ஆட்டமும் அவர்களை வெகுவாக கவர்கிறது. ஆனால் அது அவர்களுக்கானதல்ல. அதிலுள்ள வார்த்தைகளும் அவர்களுக்கானதல்ல. அதற்கான மாற்றுகள் நிறைய உள்ளது,அதற்கான தேடல் மட்டுமே இன்றைய பெற்றோர்களுக்கு தேவை. அப்படி எங்கள் குழுவில் நாங்க தேடியதன் விளைவாக தான் அழ.வள்ளியப்பா,வாணிதாசன்,பாவண்ணன்,வெற்றிச்செழியன்,சொக்கன் போன்றோர் எழுதிய சிறுவர் பாடல்களின் அறிமுகங்கள் எங்களுக்கு கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக‌ எங்களையும் சொந்தமாக பாடல்களை இயற்றச் செய்தது. ஆம் எங்கள் குழுவிலுள்ள ராஜேஸ் மற்றும் தேசிங் ஐயா அவர்கள் இதுவரை பத்து பாடல்களை இயற்றியுள்ளனர். இந்த இதழிலும் நான்கு பாடல்கள் இடம் பெற்றுள்ளது. நிகழ்வின் துவக்கமே சிறுவர்களின் ஆடல் பாடலுடன் தான் அமைந்தது. பாவண்ணன் அவர்களின் “கொழுக்கு முழுக்கு தக்காளி” பாடலுக்கும் தேசிங் ஐயா எழுதிய பள்ளிக்கு சென்றிடுவோம் என்ற கும்மி பாடலுக்கும் ஆட்டம் ஆடி நிகழ்வை துவங்கினோம். இந்த ஆடல் நிகழ்வை சிறப்பாக நடத்திய‌ சக தோழர்கள் ஷ‌ர்மிளா,சுதா,திவ்யா,பிருந்தா,புவனா மற்றும் குழுவிற்கு சிறப்பு வாழ்த்துக்கள்.

அடுத்து சிறுவர்கள் நடித்த “புதிய மனிதர்கள்” நாடகம். ஆறு சிறுவர்களை (8-11 வயது) வைத்து நாடகத்தினை அமைத்திருந்தோம். ராஜேஸ் அவர்களின் கதை. ஒரு பூங்காவில் மனிதர்கள் சிலர் சிலைகளாக மாறிவிடுகின்றனர். அங்கு விளையாட வந்த சிறுவர்கள் சிலைகளை தொட்டதும் மனிதர்களாய் உயிர் பெறுகின்றனர். அதன் பின் புதிய மனிதர்களாய் மாறியவர்கள் “கூட்டத்தில் உள்ளோர்களும் சிலையாக மாறிவருகின்றனர் அவர்களையும் புதிய மனிதர்களாய் மாற்றிட வேண்டுமென்று” உதவி கேட்கின்றனர் என்று கதை நகர்கிறது. பார்வையாளரையும் நாடகத்தின் அங்கமாக மாற்றி நாடகத்தினை சிறப்பாக நடத்திச் சென்றனர். பார்வையாளர்கள் மத்தியில் அவ்வப்பொழுது எழுந்த சிரிப்பொலிகளை கேட்க கேட்க எங்கள் மனம் நிறைவானது.

D2.jpg

நமது வாழ்வியலில் விளையாட்டு என்பது இரண்டு மூன்று வயது மூத்தவர்கள் மூலமே அதிகம் அறிமுகமாகியிருக்கும். ஆனால் இன்றைய நகர வாழ்வியலில் அதன் வாய்ப்புகள் மிகவும் அரிதாகியுள்ளது. இன்றைய சிறுவர்கள் ஏதேனும் விளையாட்டினை விளையாடுகிறார்களா என்று அப்பார்ட்மெண்ட்களில் தேடினால் அவர்கள் இங்கும் அங்குமாய் ஓடுவதை காண முடிகிறதை தவிர குறிப்பிட்ட விளையாட்டு என ஏதுமில்லை என்று எங்கள் குழுவை சேர்ந்த ப்ரவின் ஒரு முறை சொன்னார். சற்றே யோசித்துப் பார்த்தால் அது உண்மையென தோன்றுகிறது. ஆதலால் நமது மரபு விளையாட்டுகளை சிறுவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டிய கடமையும் பெற்றோர்களையே சேருகிறது. அதன் துவக்கமாக இந்த நிகழ்வில் “மரபு விளையாட்டுகளின் சித்தர்” இனியன் அவர்களை அழைத்திருந்தோம். விளையாடுவதற்கென பெரிய மைதானங்கள் இல்லாததால் இருக்கும் இடங்களில் விளையாடக்கூடிய விளையாட்டுகளை அறிமுகம் செய்தார். “சட்டிப் பானை லொடக்” விளையாட்டை சிறுவர்களை காட்டிலும் பெரியோர்கள் மிக ஆர்வமாக விளையாடினர் என்று சொல்லலாம். “சப்பாத்தி சப்பாத்தி சப் சப் சப்” என்ற விளையாட்டையும் அறிமுகம் செய்தார். இந்த விளையாட்டை சிறுவர்கள் மிக ஆர்வமாக விளையாடினர். நிகழ்வு முடிந்து மூன்று நாட்களுக்கு பிறகு பெற்றோர்களிடம் விசாரிக்கையில் இந்த விளையாட்டைப் பற்றி சொல்கின்றனர். இனியன் அவர்களுக்கு பஞ்சுமிட்டாய் சார்பில் சிறப்பு நன்றிகள்.

D4.jpg

பஞ்சுமிட்டாய் துவங்கியதே கதைகள் வழியாகத் தான். எங்கள் நிகழ்வில் எப்பொழுதும் கதைகள் உண்டு. ஆரம்பத்திலிருந்தே எங்கள் கதைகளில் நீதிப்போதனைகளை தவிர்த்து வந்தோம். “Moral of the Story” இல்லாமல் கதையா? என்ற ஆச்சரியத்துடன் பார்த்த சிறுவர்கள் தற்பொழுது அதையை மறந்தே விட்டனர். இந்த நிகழ்வில் விருந்தினர் இருவரும் கதை சொல்லும் பொறுப்பை எடுத்துக்கொண்டனர். இனியன் விளையாட்டிற்கு நடுவே எழுத்தாளார் கி.ரா அவர்களின் “பெருவிரல் குள்ளன்” கதையை நடிப்புடன் சொன்னார். அவர் “ஏய் ராசா!” என்று சொல்லும் போதெல்லாம் சிறுவர்களும் அதேப் போல் சொல்லி மகிழ்ந்தனர். இனியனுக்கு முன்பு கிருத்திகா அவர்கள் சொன்ன பாட்டி கதைகள் அருமை. ஆங்கிலமும் தாய்மொழியும் என வளரும் நம் பெங்களூரு குழந்தைகளுக்கு மாமியார் , மரப்பாச்சி,கொல்லைப்புறம் போன்ற சிறு சிறு வார்த்தைகளை கதைகளூடே அறிமுக படுத்தி நகைச்சுவை கலந்து ஆடல்,பாடலுடன் பல திடுக்கிடும் திருப்பமுமாக (குழந்தைகளுக்கு தான்) கதை சொன்ன விதம் மிகவும் அருமை. சுப்பாண்டி கதையை குழந்தைகள் ஆர்வமுடன் கவனித்தனர். டன் டிடிட்டு போறானே என்றதும் குழந்தைகள் மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்தனர்.

பஞ்சுமிட்டாய் சிறுவர்களுக்கான நிகழ்வு என்றாலும்,சிறுவர்களை அழைத்து வரும் பெரியோர்களை வெறுமன அமர வைப்பது நியாமில்லை என்றும், சிறுவர்களுக்கான மாற்றங்களையும் பெற்றோர்கள் மூலமாக செய்திடல் வேண்டுமென்றும் ராஜேஸ் அடிக்கடி சொல்வார். அதன் வழியிலே ராஜேஸ் அவர்க‌ள் “எந்திரிக்க நேரமாச்சு” மற்றும் “தூங்க நேரமாச்சு” (அவர் எழுதிய) பாடல்களை பெற்றோர்களுடன் சேர்ந்து சிறுவர்களை பாடவும் ஆடவும் வைத்தார். சிறுவர்கள் பெற்றோர்கள் கன்னங்களை கிள்ளி கொஞ்சும் காட்சி எனது நினைவுக்குள் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. அதனை தொடர்ந்து நான் எழுதிய‌ “சுட்டிப் பையன்” பாடலும் சிறுவர்களுக்கு அறிமுகமானது. “நிலவை தொட்டுப் பார்த்தானாம் டாட்டா சொல்லி வந்தானாம்” என்ற வரிகள் அவர்கள் முகத்தில் பரவசத்தை ஏற்படுத்தி என்னுள் பேரின்பத்தை ஏற்படுத்திச் சென்றது.

D3.jpg

இரண்டு மணி நேரம் சென்றதே தெரியவில்லை,அருமையான பொழுதாக அமைந்தது. இதழின் வெளியீட்டோடு நிகழ்வு இனிதே முடிந்தது. சிறுவர்கள் ஒன்றுக்கூடி இதழை விருந்தினருக்கு தந்தனர். வந்திருந்த நண்பர்களுடன் அவரவர் இடத்தினில் இதுப்போன்ற கூடலின் அவசியத்தைப் பற்றி பேசினோம். நண்பர்களும் முயற்சிப்பதாக சொன்னார்கள். அப்படி ஏற்படுத்தினால் நாங்கள் வந்து ஆரம்ப நிகழ்வுகளை நடத்துகிறோம் என்று சொன்னோம். அப்படி அமையுமென்ற‌ நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.

இந்த நிகழ்வை நடத்த உறுதுனையாக இருந்த சக பயணிகள் ஜெயக்குமார் ரங்கசாமி,ஜெயக்குமார் அனந்தப்பன்,ப்ரவின்,அருண் கார்த்திக் (புகைப்படங்களும் இவரே),ராஜேஷ்,ஷர்மிளா மற்றும் அனைத்து நண்பர்களுக்கும்,சுட்டிகளுக்கும்,பெற்றோர்களுக்கும் ந‌ன்றிகள் பல.

இதுப்போன்ற நிகழ்வினை நடத்த வேண்டுமென்ற எண்ணத்திற்கு தோழர் உமாநாத் அவர்களின் பதிவுகளுக்கு முக்கிய பங்குண்டு. அதேப் போல் எதை செய்ய வேண்டுமென்றாலும் தொடர்ந்து செய்வதின் முக்கியத்துவத்தை வா.மணிகண்டனின் பதிவுகள் மூலம் அடிக்கடி உணர்வதுண்டு. அவர்கள் இருவருக்கும் எனது நன்றிகள். (குறிப்பு:வா.மணிகண்டனின் நிசப்தம் தளத்தின் மூலம் 20 நண்பர்கள் வந்திருந்தனர். அதற்கும் நன்றிகள்)

நன்றி,
பிரபு
பஞ்சுமிட்டாய் ஆசிரியர் குழு

Advertisements

4 thoughts on “பல வண்ணங்களில் பஞ்சுமிட்டாய்”

  1. Dear friend, happy to know that such initiatives towards TAMIL. If you can advice similar programs or initiatives in Chennai, we would like to take part of our children as well. Please do the needful from PANCHU MITTAI.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s