பஞ்சுமிட்டாய் அறிமுகம் – என்.சொக்கன்

DSC_7678.JPG

அந்த அறைமுழுக்கக் குழந்தைகள், இன்னும் சொற்களைச் சரியாக உச்சரிக்க/கோக்கப்பழகாத மழலையர், தத்தக்கா புத்தக்கா என்று நடக்கும் சிறுபிள்ளைகளில் தொடங்கி கோட்,சூட்போட்ட பெரியபிள்ளைகள்வரை அங்கே குழுமியிருந்தார்கள். எல்லார்முகத்திலும் பேராவல்.

சிறிதுநேரத்தில், நிகழ்ச்சி தொடங்கியது. கலகலப்பான தவளைப்பாட்டில் ஆரம்பித்தார்கள், பிறகு கொத்துபரோட்டா சாப்பிட்ட யானை வந்தது, பச்சை, மஞ்சள், சிவப்பு என்று விதவிதமாக நிறம்மாறும் வால்கொண்ட சிங்கம் வந்தது, மடிக்கணினி வேண்டாம், தொலைக்காட்சி வேண்டாம், விதைகளே போதும் என்று வரம் கேட்கும் சிறுவர்கள் வந்தார்கள், மழையைப்பற்றிக் கொண்டாடும் பாடலொன்று வந்தது… அனைத்திலும் சிறுவர்கள் ஆவலுடன் பங்கேற்றார்கள், பலர் தாங்களே கதைசொன்னார்கள், பிரமாதமான கற்பனைவளத்தோடு கதைசொன்னார்கள், குறும்பான புத்திசாலிக் கேள்விகளைக் கேட்டார்கள்.

குறிப்பாக, இத்துணை நேர்த்தியாகத் தமிழ்பேசும் குழந்தைகளை நான் பெங்களூரில் அதிகம் கண்டதே இல்லை. கதைசொல்லும்போது எப்போதாவதுதான் ஆங்கிலம் பயன்படுத்தினார்கள், மற்றபடி பெரும்பகுதி தமிழிலேயேதான் அழகாகப் பேசினார்கள்.

இத்தனைக்கும் அங்கே வந்திருந்த எல்லாரும் தமிழர்கள் அல்லர். மேடையில் அபாரமாகத் தமிழில் கதைசொன்ன ஒரு சிறுவன், இடைவேளையின்போது தன் தந்தையிடம் சரளமாகத் தெலுங்கில் பேசிக்கொண்டிருந்தான். இன்னொரு சிறுவன் புலியை ‘ஹுலி’ (கன்னடச்சொல்) என்றழைத்தான், ஆனால் அவன்சொன்ன கதை முழுக்கமுழுக்கத் தமிழிலேயே இருந்தது.

இந்நிகழ்ச்சிக்குச் சிறப்புவிருந்தினராக வந்திருந்த எழுத்தாளர் பாவண்ணன் அருமையாகப் பேசினார், ஒரு யானைக்கதை சொன்னார். நானும் வா. மணிகண்டனும் சில நிமிடங்கள் பேசினோம், இந்தச் சிறு பகுதிகளைத்தவிர, மொத்த நிகழ்ச்சியும் சிறுவர்களால்தான் வழிநடத்தப்பட்டது.

சிறுவர்கள் இந்நிகழ்ச்சியை எப்படிக் கொண்டாடினார்கள் என்பதற்கு ஒரு சான்று: நிகழ்ச்சி நிறைவடைந்தபிறகு, அமைப்பாளர் ஒருவரிடம் வந்தான் ஒரு சிறுவன், ‘அங்கிள், அடுத்த நிகழ்ச்சி எப்போ?’ என்றான்.

‘நாளைக்கே வெச்சுக்கலாமா?’ என்று அவன் கன்னத்தைச் செல்லமாகத் தட்டினார் அவர்.

‘ஓ!’ என்றபோது அவன் முகத்தில்தான் எத்துணை மகிழ்ச்சி!

பின்குறிப்புகள்:

1. ‘பஞ்சுமிட்டாய்’ என்ற பெயரில் ஒரு சிறுவர் இதழும் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. குழந்தைகளே எழுதி, வரைந்து வெளியிடும் இந்த இதழில் கதைகள், பாடல்கள், புதிர்கள் என்று எல்லாம் உண்டு. மிகவும் அக்கறையுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த இதழை இணையத்தில் இலவசமாகவே படிக்கலாம்:

logo_design_final

2. பெங்களூரில் உள்ள தமிழ்க்குழந்தைகளை இந்த மாதாந்திர நிகழ்ச்சிக்கு அழைத்துச்செல்லுங்கள். மேலும் விவரங்களுக்கு இந்த மின்னஞ்சலுக்கு எழுதுங்கள்: pravaham2016@gmail.com

 

DSC_7697.JPG

அன்புடன்,
என்.சொக்கன்

Advertisements

தவளை சாமி – அருண் கார்த்திக்

பைம்பொழில் என்று ஒரு சின்ன கிராமம் இருந்தது. அந்த கிராமத்தில் சிவக்கொழுந்து என்று ஒரு விவசாயி இருந்தார், அவர் கிராமத்திலுள்ள‌ எல்லோருக்கும் நெல்,காய்கறி என உணவு பயிர்களை விளைவித்து கொடுத்தார்.ஊர் மக்களை பசி இல்லாமல் பார்த்துக் கொண்டார், ஊர் மக்களும் அவரை நன்றாக வைத்துக்கொண்டனர். இப்படி நன்றாக அவரது வாழ்கை சென்றது,அப்பொழுது திடீரென‌ ஒரு கோடையில் வெப்பம் ரொம்ப ரொம்ப‌ அதிகமானது, அப்பொழுது விளைந்த‌  தக்காளியெல்லாம் சீக்கிரமே அழுகி போய்விட்டது.சிவக்கொழுந்து என்ன செய்வதென்று தெரியாமல் மிகவும் கவலை அடைந்தார்.தக்காளியை பார்க்கும் பொழுதெல்லாம் அழுதார்.அவர் அழுவதை பார்த்து மக்கள் ஆறுதல் சொல்லினர்.

என்ன தான் ஊர் மக்கள் சிவக்கொழுந்துக்கு ஆறுதல் சொன்னாலும் , தக்காளி இல்லாமல் என்ன செய்வது என்று தெரியாமல் அவர்களும் மிகவும் வருத்தப்பட்டனர்.அப்பொழுது ஒரு மூட்டை தவளையுடன் ஊருக்குள் ஒருவர் வந்தார்.”யாரடா அது நம்மூருக்குள்ள புதுசா ஒரு ஆளு வரது” என்று ஊர் மக்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டிருக்கும் பொழுது .அந்த மனிதர் ஊர் கோயிலருகிலுள்ள ஆலமரத்தடியில் கண்களை மூடி அமர்ந்தார்.

சிறிது நேரத்தில் மக்கள் அனைவரும் அங்கே கூடினர்.அந்த மனிதர் கண்களை திறந்து , மூட்டையிலிருந்து ஒரே ஒரு தவளையை மட்டும‌ எடுத்து வெளியே வைத்தார்.அதனிடம் ஏதோ பேசினார் ,அதுவும் “கிர்ர்.கிர்ர்” என்று கத்தியது.உடனே கூடியிருந்த மக்களிடம் “ஊருக்கு தண்ணி பாம்போட சாபம் இருக்கு,அதுனால தான் தக்காளியெல்லாம் அழுகி போய்டுச்சு.இதை நான் சரி செய்யவே வந்திருக்கிறேன்” என்றார்.அதற்கு நான் கொஞ்ச நாட்கள் தங்க வேண்டும் என்றார்.

அவர் சாமியார் போன்று தோற்றம் இருந்ததால் மக்கள் அவரது பேச்சினை நம்பத்துவங்கினர்.அவரை ஊரில் தங்க வைத்தனர்.அவரை “தவளைச் சாமி” என்று அன்புடன் அழைத்தனர்.வெப்பம் அதிகமானது தான் காரணம் என்று சிவக்கொழுந்து மக்களிடம் எவ்வளவோ சொல்லியும் யாரும் காதில் வாங்கவேயில்லை.தவளை சாமியாருக்கு வேண்டியதையெல்லாம் மக்கள் செய்தனர்.சிறிது நாட்கள் கழித்து அனைவரையும் அழைத்தார் சாமியார்.

“உங்க ஊரிலுள்ள தண்ணி பாம்பு சாபத்திற்கு முக்கிய காரணம் சிவகொழுந்து தான், அவன்ட இருக்கிற எல்லா விதைகளையும் முதலில் இங்க கொண்டு வாங்க” என்றார்.”இனி அவனிடமிருந்து எதையும் வாங்க கூடாது” என்றார்.மக்களும் சாமியார் சொல்வதை நம்பினர்.சிவகொழுந்தை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்தனர்,அவனிடமிருந்த தக்காளி விதைகளையெல்லாம் பிடிங்கிக்கொண்டனர். யாருக்கும் தெரியாமல் கொஞ்ச விதைகளை மட்டும் எடுத்துக் கொண்டு சிவக்கொழுந்து வேறு வழியின்றி ஊரை விட்டு சென்றுவிட்டான். அவனிட‌மிருந்து பிடுங்கிய விதைகளை சாமியாரிடம் தந்தனர்.

அந்த விதைகளின் மீது தவளை தோலால் செய்த சாயத்தை பூசி மக்களிடம் தந்தார்.தண்ணி சாபத்தை நீக்கிவிட்டதாக சொன்னார்.மக்கள் அந்த விதைகளை கொண்டு தக்காளியை விளைவித்தனர்.தக்காளி அமோகமாக விளைந்தது,3 வாரம் ஆகியும் அழுகவேயில்லை , அதுமட்டுமில்லாமல் தக்காளி முன்பை விட பெரிதாகவும் இருந்தது.அவர்களுக்கு இரட்டிப்பு லாபமும் கிடைத்தது.மக்கள் தவளை சாமியாரை தெய்வமாக கொண்டாடினர்.சிறிது நாட்கள் கழித்து தக்காளியைப் போன்று மற்ற காய்கறிகளையும் இதுபோன்று சாபம் நீக்க வேண்டும் என்று சாமியார் சொன்னார்.மக்களும் அவருக்கு வேண்டியதை செய்வதாக வாக்கு கொடுத்தனர்.

“இந்த சாபத்தை நீக்க தவளை தோலால் செய்த சாயம் வேண்டும், நான் கொண்டுவந்த தவளைகள் அனைத்தும் தக்காளிக்கே தீர்ந்துவிட்டது.ஆதலால் இந்த ஊரிலுள்ள குளம்,ஏரி,ஆற்றை எனக்கு நீங்கள் தர வேண்டும்” என்றார்.அவரை கடவுளாக நம்பிய மக்களும் அப்படியே செய்தனர்.தவளைகள் அனைத்தையும் பிடித்து விதைகளுக்கெல்லாம் சாயம் செய்து கொடுத்தார்.சாமியாரின் புகழ் அக்கம் பக்க ஊருக்கெல்லாம் பரவியது.அனைவருக்கும் சாயம் பூசிய விதைகளை செய்துக் கொடுத்தார்.

ஆனால் சிறிது நாட்களில் தவளைகளே இல்லாமல் போனது , தவளைகள் இல்லாமல் போனதால் கொசு,பூச்சிகள் அனைத்தும் ஊரில் பெருகி ஊர் மக்களுக்கு காய்ச்சல் வந்தது.தவளை சாயம் பூசிய காய்கறிகளை சாப்பிட்டதால் ஊருக்குள் புதுப்புது நோய்களும் உருவாகின.

தவளை சாமி ஊரிலுள்ள நீரையும்,சாயம் பூசிய விதையையும் விற்று நிறைய சம்பாதித்தார்.சம்பாதித்த பணத்தையெல்லாம் எடுத்துக்கொண்டு ஒரு நாள் கப்பல் ஏறி சென்றுவிட்டார்.

சாமியார் இமைய மலை சென்றிருக்கிறார் , மீண்டும் வருவார் என்று நம்பிக்கொண்டு மக்கள் சாயம் பூசிய விதைகளை இன்றும் விளைவித்து நோயுடன் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றனர்.மக்களின் நம்பிகையின் படி அவர்களை காப்பாற்ற மீண்டும் சாமியார் வருவாரா?  அல்லது மக்களின் அறியாமையை போட்க சிவகொழுந்து வருவாரா ?

பஞ்சுமிட்டாய் முதல் இதழ்…

முதல் இதழிற்கு பஞ்சுமிட்டாய் என்று பெயர் வைக்கவில்லை , பிரவாகம் என்ற பெயரிலே வந்தது.இந்த இதழிலுள்ள குறைகளை கருத்தில் கொண்டு இரண்டாம் இதழ் வந்தது.முதல் இதழை உங்களுக்காக இங்கே பகிர்கிறோம்..

//  பிரவாகம் – சிறுவர் இதழ் 1 – பிப் 2016 //

கூட்டு முயற்சி என்பது தனிமனிதராய் செய்யமுடியாத சில விஷயங்களை எளிதில் செய்து முடித்துவிடுகிறது.அப்படித்தான் எங்கள் தெருவிலுள்ள apartment தமிழ் மக்கள் சேர்ந்து சிறுவர்களுக்கு கதை சொல்ல துவங்கினோன்.அப்புறம் Craft நிகழ்வுகள் நடத்தினோம்.தற்பொழுது சிறுவர்களுக்கான இதழை கொண்டுவந்துள்ளோம்.பெங்களூர் என்பதால் சிறுவர்களுக்கு தமிழ் எழுத்துக்கள் பரிச்சயமில்லாததாக இருக்கிறது.ஆதலால் சிறுவர்களின் படைப்பை ஆங்கிலத்திலும் , பெரியவர்கள் படைப்பை தமிழிலும் தந்துள்ளோம்.சிறுவர்களுக்கு பெற்றோர்கள் தமிழ் படைப்புகளை வாசித்துக்காட்டுவர் என்ற நம்பிக்கையில் இப்படி ஒரு ஏற்பாடு செய்துள்ளோம்.

 

https://goo.gl/rz9L5s

IMG-20160214-WA0021

 

நன்றி,
பிரவாகம்

அல்வா – தேசிங் தாத்தா

alwaஅல்வா இது அல்வாதான்!

திருநெல்வேலி அல்வாதான்!

கோதுமைப் பாலில்

நெய்யும் சீனியும் கொட்டி செய்த அல்வா தான்!

அல்வா இது அல்வாதான்!

திருநெல்வேலி அல்வாதான்!

வாயில் போட்டுப் பாருங்கள்!

தேனாய் இனிக்கும் சுவையைத்தான்!

அம்மா செய்த அல்வாதான்!

அதிகம் இனிக்கும் அல்வாதான்!

நிலாவின் யோசனை – சுட்டி அதிதி

Nila1

குளிர்காலம் வந்தாலே நிலாவிற்கு பிரச்சனை தான்.குளிர் குளிர்..எப்பொழுதும் குளிர் தான். இந்த முறையும் பயங்கரமான குளிர் , நிலாவால் தாங்கவே முடியவில்லை.

 

நிலா அதன் அம்மாவிடம் சென்றது,அம்மாவைப் பார்த்து,Nila2

“அம்மா..அம்மா..எனக்கு ரொம்ப‌ குளிருதும்மா.எனக்கு சட்டை தைச்சு குடுங்க” என்றது.

அம்மா சிறிது நேரம் யோசித்துவிட்டு,”நிலா,உனக்கு எப்படிம்மா நான் தைக்கிறது ?

 

Nila3ஒரு நாள் பெருசா இருக்க,ஒரு நான் குட்டியா இருக்க,இன்னொரு நாள் ரொம்ப ரொம்ப குட்டியா இருக்க,எந்த அளவுக்கு சட்டை தைக்கிறது” என்று நிலாவிடம் அம்மா கேட்டார்.

நிலாவும் என்ன செய்வதென்று அன்றிலிருந்து யோசித்துக் கொண்டேயிருக்கிறது,இன்னும் அதனால் கண்டுபிடிக்க முடியவில்லை.உங்களுக்கு ஏதாச்சும் Nila6யோசனை இருக்கா?தெரிஞ்சா சொல்லுங்களேன்,நம்ம நிலா பாவும் தான.

கொசு கடிச்சிச்சு – சுட்டி தன்யஸ்ரீ

ஒரு ஊர்ல ஒரு குட்டிப் பாப்பா இருந்தாளாம்.அவளை கொசு ஒன்னு கடிச்சிச்சாம். கொசு கடிச்சதுல இரத்தம் கூட வந்திடிச்சு.Mosquito

பாப்பா ரொம்ப அழ ஆரம்பிச்சிட்டாள்.உடனே பக்கத்துல இருந்த சிங்கமும் புலியும் அவள்ட வந்து.அழாதே பாப்பா ,

நாங்க உன்னை கடிக்கல , அந்தக் கொசு தான் கடிச்சதுன்னு சொன்னாங்களாம்.அப்படியும் பாப்பா அழுகைய நிறுத்தவேயில்லை. tigerlion

 

 

 

 

 

 

உடனே புலி , கொசுக்கு ஃபோன் செஞ்சிதாம்.”ஏய் கொசு , ஏன் பாப்பாவை கடிச்ச?ஹ்ம்ம்..இனிமே அப்படி செய்யக் கூடாது..புரியுதா”ன்னு சொல்லிச்சாம்.

ele

யானை,கரடி,தவக்களை எல்லாம் வந்து;”பாப்பா,அழாதே..உனக்கு ஒன்னுமில்ல,எல்லா சரியாடு”ம்னு சொன்னாங்க.அப்புறம் அவளுக்கு சரியாடிச்சு.

கொசுவும் வந்து சாரி கேட்டுடிச்சு.

baby  mq2

பஞ்சுமிட்டாய் அறிமுகம் – 2

நன்றி க்ருத்திகாதரன் (க்ருத்திகா தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டது)

எல்லாருக்கும் ஒரு மாதிரி என்றால் எனக்கு எப்பவும் வாழ்வு ஏதாவது வித்தியாசமாய், சுவையாய் தட்டில் வைத்து காத்திருக்கும். இணையம் மூலம் நடக்கும் வாழ்வின் திருப்பங்கள் மிக அழகானவை.

ஒரு திறந்தவெளி புத்தக வெளியீடு. எழுதியவர்கள்தான் வாசகர்களும்.

அந்த எழுத்தாளர்கள் பலருக்கு வயது மிகக் குறைவு.

ஆம் குட்டிஸ்க்கு குட்டிஸ்களால் தயாரித்த புத்தகம் வெளியீடு. வெற்றிகரமாக பதினெட்டாவது கதை சொல்லல் நிகழ்வு. இதன் சாத்தியம் அத்தனை எளிதில்லை

இருபது வருடமாக இருந்தும் இன்னும் ஒரு தமிழ் குழுவைக் கூட ஏற்படுத்தவில்லை என இவரை பார்த்தப்பொழுது எனக்கு சிறு குற்றஉணர்வு.

தமிழ் குழந்தைகளை வண்டி ரிஜிஸ்டர் எண்ணேல்லாம் பார்த்து இணைத்து இருக்கிறார். இலக்கிய கூட்டத்துக்கு இருபது பேருக்கு மேல் வராத ஊரில் இத்தனைப் பேரை தமிழால் இணைத்து இருப்பது பெரிய செயல் .

கதை சொல்லல் என்றவுடன் என் அபார்ட்மென்ட் சில தமிழ்வாசிகள் ஆங்கிலத்தில் வையேன்..என் குழந்தைக்கு தமிழ் புரியாதே என்றார்கள்

பெங்களுரில் பல தமிழ் குழந்தைகளின் நிலை இதான். இதை மாற்ற பிரபு, ராஜேஷ் மற்றும் அவர்களின் நண்பர்கள் செய்யும் தொடர் செயல்கள் பெரிது.

இவர்களுடன் இணைய இணையம் கொடுத்த வாய்ப்பு எனக்கு அதிர்ஷ்டம்.

முதல் இதழே வித்தியாசமாய்..குழந்தைகளை ஒரு நிகழ்வில் மந்திர பேனா கொடுத்து படம் வரைய செய்து..அதற்கு கதை சொல்லி அதை இதழில் வெளியிட்டு..

சில கதைகளும் சமூக நோக்கோடு..எடுத்துக்காட்டாக நூடுல்ஸ்,பிசா கெடுதல்கள், ஓசோன் ஓட்டை அவர்களை பார்க்கவே பிரமிப்பாக இருந்தது.

குழந்தைகளை வைத்துகொண்டு எந்த இலக்கிய கூட்டமும் செல்ல முடியாது..ஆனால் சிறுவர் இலக்கியம் பேசலாம். அப்படி பேச வாய்ப்பு தந்த இளைய தலைமுறையினர்..

வாழ்த்துகளும்,,மனம் நிறை அன்பும்.

நான் சொன்னது இந்த முறை அத்திரிப்பாச்சா கொழுக்கட்டை கதை.. இன்னும் கதைகளை சுவராசியமாக சொல்ல நிகழ்வுகள் தூண்டுகிறது.

நான் முதல் முதலில் வெளியிட்ட இதழ்.

சிறு சிறுவர் இதழான பஞ்சுமிட்டாய் இங்கு இணைய வாசிகளுக்கும்.